கட்டுரை

ஜெ.வுக்கு பிந்தைய ஓராண்டு!

குடும்பமும் குழப்பமும்!

Staff Writer

ஆகிவிட்டது ஓராண்டு... தமிழகத்தை தலைமகளாக ஆட்சி செய்த ஜெ, இம்மண்ணை விட்டுச் சென்று! இரண்டாவது முறையாக தொடர்ந்து வென்று 2016 மே மாதம் ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா, ஏழே மாதங்களில் கடந்த டிசம்பர் 5 அன்று மரணமடைந்துவிட்டார். இதை அடுத்து அதிமுக என்னும் கட்சி பெரும்  குழப்பத்தில் ஆழ்ந்து மிகப்பெரிய அரசியல் சூறாவளிகளைக் கண்டுவருகிறது. ஆட்சியை இழந்துவிடும் சூழலை எதிர்கொண்டாலும் அக்கட்சி இறுகப்பற்றிக்கொண்டு சமாளித்து வருகிறது. தங்களின் வலிமையான தலைவியின் மரணத்தைத் தொடர்ந்து  என்னென்னவெல்லாம் நடக்கிறது என்று அதிமுக தொண்டர்கள் பெருமூச்சு விட்டவண்ணம் நிகழ்வுகளைப் பார்த்துவருகிறார்கள்.

ஆனால் அவர்களின் முந்தைய தலைமுறைக்கு இந்த நிகழ்வுகள் புதிதாக இருக்காது. எம்ஜிஆர் மரணத்தை அடுத்து கட்சி எதிர்கொண்ட குழப்பங்களை, வன்முறைகளைப் பார்த்தவர்கள் அவர்கள். ஆனால் அன்று இருந்த அரசியல் சூழல் வேறு; இப்போதிருக்கும் சூழல் வேறு.

திரும்பிப்பார்த்தால் கடந்த ஓராண்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் ஒவ்வொரு முறையும் ஆச்சரியங்களைத் தந்துகொண்டே இருந்தன.

 ஜெ மறைவுக்குப் பின் சசிகலாவின் தலைமையில் கட்சி சமாளித்துத் தாக்குப் பிடிக்கும் என்றுதான் ஆரம்பத்தில் எண்ணப்பட்டது. அவரும் கட்சிக்குள் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்திருந்தார். அவரை வீடு தேடிச் சென்று கட்சித் தலைமை ஏற்குமாறு அதிமுக தலைவர்கள் வேண்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் முதல் எதிர்ப்பு ஒபிஎஸ்ஸிடம் இருந்து வந்தது. அரசியல் நோக்கர்களால் இனி எந்நாளும் மறக்கவே முடியாத இரவாக அவர் ஜெ சமாதியில் தியானத்தில் அமர்ந்த பிப்ரவரி மாதத்தின் ஏழாம் தேதி இரவு அமைந்தது. அதன் பின்னர்தான் எத்தனை திருப்பங்கள்? துணுக்குறல்கள்.. குழப்பங்கள்!

உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் பிப்ரவரி 14-ல் கொடுத்த தீர்ப்பு, பன்னீர்செல்வத்தின் எதிர்ப்புடன் இன்னொரு பெரிய சவாலாக சசிகலாவுக்கு வந்து சேர்ந்தது. கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்துப் பாதுகாக்க வேண்டி வந்ததெல்லாம் தமிழகத்தின் இருண்ட நாட்கள்!  அவர் சிறைக்குச் செல்லும்முன், என் தம்பி எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் என்று சொல்லி அவரைத் தெரிவு செய்து கொடுத்துச் சென்றார். பிப்ரவரி 17-ல் எடப்பாடி முதல்வர் ஆனார். ஓ.பி.எஸ் குழுவினரின் பிளவை அடுத்து தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை முடக்கி வைத்தது. டி.டி.வி. தினகரனை துணைப்பொதுச்செயலாளர் ஆக்கி கட்சிப்பொறுப்பை கொடுத்துச் சென்றிருந்தார் சசிகலா. இதற்கிடையில் ஆர்கே இடைத்தேர்தல் வந்து அதில் வேட்பாளராக களமிறங்கினார் தினகரன். முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக அந்தத் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. இந்த பரபரப்பு ஓயவில்லை. அதற்குள் இன்னொரு திருப்பம்!

இம்முறை தினகரனின் கட்டுப்பாட்டில் இருந்து அதிமுக விலகிச்சென்றது.

ஆட்சியை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்த எடப்பாடி, கட்சியின் மீதான பிடியையும் இறுக்கினார். தினகரன் தன் ஆதரவாளர்களுடன் எதாவது பெரிதாக எதிர்வினை ஆற்றும் முன்பாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவரை டெல்லி போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது.

இதன் பின்னர் தினகரனின் ஆதரவுக்குழுவுக்கு இறங்குமுகம்தான். டெல்லியில் ஆளும் பாஜகவின் ஆதரவுடன் ஓபிஎஸ்- எடப்பாடி இணைப்பு நடந்தது. ஆளுநர் வித்யாசாகர் ராவ் கைகோர்த்துவைக்க இருவரும் இணைந்தனர். ஓபிஎஸ் மந்திரிசபையில் இணைந்தார். ஆனால் தினகரன் தன் தரப்பு எம் எல் ஏக்கள் ஆதரவை விலக்கச்சொல்லி அடுத்த அஸ்திரத்தை ஏவினார்! எடப்பாடி அணியினர் சிலநாட்கள் தங்கள் பெரும்பான்மையை இழந்தனர். ஆனால் தினகரன் தரப்பின் 18  எம்எல்ஏக்களை தகுதி இழக்கச் செய்ததன் மூலம் இதைச் சரிசெய்ய முயன்றது ஆளும் தரப்பு. இப்போது இந்த பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களை நடத்திக்கொண்டு சுறுசுறுப்பாக இருக்கிறார்.

இந்த பின்னணியில் நடந்ததுதான் உச்சக் கட்ட நடவடிக்கை. ஆம். சமீபத்தில் சசிகலா குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் இல்லத்திலும் சுமார் 187 இடங்களில் மிகப்பெரிய வருமானத்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் என்ன கிடைத்தது? எம்மாதிரி இதை அவர்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இது இன்னும் பல காலத்துக்கு அவர்களுக்கு பெரும் நெருக்கடியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜெயா தொலைக்காட்சியில் திமுகவின் துரைமுருகன் நேர்காணல் ஒளிபரப்பப்பட்டதே இந்த சோதனை ஏற்படுத்திய நடுக்கத்தின் விளைவுதான். இந்த சோதனையோடு சோதனையாக ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்திலும் சோதனைக் குழு நுழைந்துவிட்டது.

இதற்கு அடுத்ததாக சமீபத்தில் நிகழ்ந்த இன்னொரு  முக்கியமான நிகழ்வு முடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னம் எடப்பாடி - ஓபிஎஸ் தரப்புக்கே வழங்கப்பட்டு, ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான தேதியும் மறுநாளே அறிவிக்கப்பட்டது. இவ்வளவு விஷயங்களுடன், திருப்பங்களும் நடந்து, இரட்டை இலை சின்னம் ஒரு தரப்புக்கு வழங்கப்பட்டதுடன் இந்த கதைக்கு சுபம் போடலாம் என்றால் அதுவும் அவ்வளவு எளிதல்ல.

எடப்பாடி- ஓபிஎஸ் இணைப்பில் விரிசல்கள் உருவாகும் வாய்ப்பும், நீதிமன்றத்தில் இருக்கும் எம். எல்.ஏக்கள் தகுதி இழப்பு வழக்கும் எப்படிப்போகும் என்ற கோணம் வேறு பல திருப்பங்களைக் கொடுக்கலாம்.

“பொதுவாக தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் புலனாகும். ஒரு தலைவரை ஒழிப்பதற்காக அதிகப்படியான நெருக்கடிகளைக் கொடுக்கும்போது அந்த நபர் பெரிதாக வளர்வதற்கே வாய்ப்புகள் அதிகம் இருந்திருக்கிறது. இப்போது டி.டி.வி. தினகரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் கவனிக்கவேண்டும்” என்று ஓர் அரசியல் நோக்கர் தெரிவிக்கிறார்.

 “ஆனால் குற்றவாளி என்று நிரூபணம் ஆகி கட்சித்தலைமை  நான்காண்டுகள் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிற நிலையில் இந்த ’நெருக்கடித் தத்துவம்’ பொருளிழக்கிறது. கொஞ்சமாவது தார்மீக அறம் இருக்கிற இடத்துக்குத்தான் மக்கள் ஆதரவு இருக்கும்,” என்கிற கருத்தும் உள்ளது.

ஆர்.கே. நகர் தேர்தலை நோக்கித் தமிழக அரசியலின் குவிமையம் வரும் டிசம்பர் மாதம் முழுக்க குவிந்திருக்கும் சமயத்தில் ஓசைப்படாமல் தமிழகத்தில் வேறுசில காய்களும் நகர்த்தப்பட இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் இவ்வளவு அரசியல் பிரச்னைகளும் குழப்பங்களும் தமிழ்நாட்டில் ஆளும் அதிமுகவைச் சுற்றும் என்று ஜெ இருந்தபோது யாரும் நினைத்துப்பார்த்திருக்க முடியுமா? அவரது ஒராண்டு நினைவுநாளையொட்டி எழுகின்ற முதன்மையான கேள்வி இதுதான்.

இன்னொரு விஷயம் இந்த ஓராண்டில் நடந்த விஷயங்களைத்திரும்பிப் பார்க்கையில் இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறதா என்று நமக்குத் தலைசுற்றுகிறது. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட அனைத்து அரசியல் அம்சங்களையும் ஒரே ஆண்டில் பார்த்துவிட்டது தமிழக அரசியல். இதற்குமேல் அடித்தால் நாடு தாங்குமா சாமி?   

டிசம்பர், 2017.